Class 10 Tamil Iyal 1 Poem Appreciation (Pa Nayam Parattal) - Mozhi Vazhthu

இயல் 1 - பா நயம் பாராட்டல் | மொழி வாழ்த்து

இயல் 1- பா நயம் பாராட்டல்

மொழி வாழ்த்து

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே!

தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே!

ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே!

உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே!

வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே!

மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே!

தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே!

தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!

- கா.நமச்சிவாயர்

திரண்ட கருத்து

தேனைவிட இனிமையான செந்தமிழ் மொழியே! தென்னாடு பெருமை பெற விளங்கும் தென் மொழியே! உடம்பில் ஒளிவிட்டு விளங்குகிற உயர்ந்த மொழியே! உணர்வுக்கு உணர்வு தந்து ஒளிரும் தமிழ் மொழியே!

சிறப்பினால் வானத்தைவிட உயர்ந்த வண்டமிழ் மொழியே! மனிதர்களுக்கு இரண்டு விழிகளாக விளங்கும் நல்ல மொழியே! தானாகவே சிறப்புற்று விளங்கும் தனித்தமிழ் மொழியே! இனியும் தழைத்து இனிது உயர்வாயாக.

மையக்கருத்து

தமிழ் மொழி இனிமையும், பெருமையும் உடையது. அதன் சிறப்பினால் இனியும் தழைத்து இனிது உயரும்.

நயங்கள்

சொல் நயம்

'ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே' என்ற பாடலடியில் சொல்நயம் மிகுந்து வந்துள்ளது.

பொருள் நயம்

"வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே! மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே" ஆகியவை ஆழமான பொருள் உடையன. கவிதையின் மையக் கருத்துக்கு அழகு சேர்ப்பன.

சந்த நயம்

'சந்தம் செந்தமிழுக்கே சொந்தம்' என்பார்கள். வல்லோசையும் மெல்லோசையும் சேருமிடத்தில் சந்தநயம் பிறக்கிறது.

"ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே! உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே" என்ற கவிதை வரிகளில் இனிமையான சந்தநயம் பயின்று வந்துள்ளது.

தொடை நயம்

"தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்" என்பார்கள். இப்பாடலில் மோனை, எதுகை, இயைபு ஆகிய தொடை நயங்கள் பயின்று வந்துள்ளன.

மோனை நயம்

முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயம் ஆகும்.

படைக்கு அழகு யானை

பாடலுக்கு அழகு மோனை

என்பதற்கு ஏற்ப இப்பாடலில்,

தேனினும்

தென்னாடு

திகழுந்தென்

தானனி

னித்தமிழ்

ழைத்தினி

ண்டமிழ்

னினும்

ணர்வினுக்

ளிர்வுறும்

ண்டமிழ்

ளிர்தமிழ்

வானினும்

ண்டமிழ்

மாந்தருக்

யங்குநன்

என்ற இடங்களில் மோனை நயம் பயின்று வந்துள்ளது.

எதுகை நயம்

முதலெழுத்து அளவொத்து, இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை நயம் ஆகும்.

தேனினும்

னினும்

வானினும்

ர்வினுக்

குர்வதாய்

என்ற இடங்களில் எதுகை நயம் பயின்று வந்துள்ளது.

இயைபு நயம்

பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ இயைந்து வருவது இயைபுநயம் ஆகும்.

மொழியே

மொழியே

என்ற இடங்களில் இயைபு நயம் பயின்று வந்துள்ளது.

அணிநயம்

'அணி இல்லாத கவிதை

பணி இல்லாத வனிதை'

என்பார்கள். இப்பாடலில், கவிஞர், "தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே! தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே!" என்று தமிழ் மொழியின் இயல்பைப் பாடுகிறார். எனவே, இது 'இயல்பு நவிற்சி அணி' ஆகும்.

பா வகை

ஒவ்வோர் அடியிலும் எட்டு சீர்கள் வந்துள்ளதால் இது, 'எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' ஆகும்.