Aatruppaduthuthal Then and Now: 5 Mark Question for Class 10 Tamil

ஆற்றுப்படுத்துதல்: அன்றும் இன்றும் - 5 மதிப்பெண் வினா

வினா: ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

ஆற்றுப்படுத்துதல் அன்றும் இன்றும்

ஆற்றுப்படுத்துதல்

ஆறு - வழி ; படுத்துதல் - காட்டுதல்

வறுமை ஒரு கொடிய நோய்; உடலை வருத்துவதோடு உள்ளத்தையும் வாட்டக்கூடியது. அத்தகைய வறியோர்க்குத் தம்பால் உள்ளவை எல்லாம் உவந்தீயும் வள்ளல்களை நோக்கி, பரிசில் பெற்று திரும்பிய கலைவாணர் வறுமையில் வாடும் கலைவாணர்க்கு வழிகாட்டுவது ஆற்றுப்படை.

சங்க காலத்தில் ஆற்றுப்படை, தனி இலக்கிய வகையாகவே வளர்ந்தது. புறநானூறு, பதிற்றுப்பத்து, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகிய நூல்கள் இதற்குச் சான்று பகர்வன.

அன்றைய ஆற்றுப்படுத்துதல்

  1. இந்திரனின் அமிழ்தமே கிடைத்தாலும் 'இனிது' எனத் தனித்து உண்ணமாட்டார். பகிர்ந்து உண்பார்.
  2. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்பார்.
  3. கதவை அடைத்துவிட்டுத் தாமே உண்பதை இழிவு எனக் கருதுவார்.
  4. பொருள் இல்லாத நிலையிலும், இருப்பதைப் பகிர்ந்து உண்பார்.
  5. பகைக்கு அஞ்சார்; பாணரின் வறுமைக்கு அஞ்சுவார்
  6. பொருநர், பாணர், கூத்தர், விறலியர் ஆகியோருக்குத் தத்தம் கலைஞர்கள், "இன்ன வள்ளலிடம் சென்றால் இன்ன பொருளைப் பெறலாம், வருந்தாதே!" என்று கூறி ஆற்றுப்படுத்துவார்.

இன்றைய வழிகாட்டுதல்

  1. உறவினர்களைக் காணும்போது உடல்நலம் பற்றி விசாரிக்கின்றனர்; ஆறுதல் கூறுகின்றனர்; "இந்த மருத்துவரிடம் செல்லுங்கள்" என்று வழிகாட்டுகின்றனர்.
  2. மாணவர்கள் கல்வியில் மேம்பட, "இந்தப் பயிற்சி நிலையத்துக்குச் செல்லுங்கள்; இந்தப் படிப்புகளைப் படியுங்கள்; இந்த வேலை வாய்ப்புகள் இருக்கின்றன" என்று வழிகாட்டுகின்றனர்.
  3. வறுமையில் வாடும் மாணவச் செல்வங்கள் மேற்படிப்பைத் தொடர இலவசக் கல்வியை அளிக்கும் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை நோக்கி வழிகாட்டுகின்றனர்.
  4. மனக் கவலையிலிருந்து விடுபட இறைபக்தி, யோகா, மனவளக்கலை, மனநல மருத்துவம் போன்றவற்றை நோக்கி வழிகாட்டுகின்றனர்.
  5. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், அனாதைக் குழந்தைகள், கணவரை இழந்த பெண்கள், கணவரால் கைவிடப்பட்டோர் போன்றார்க்கு அரசு உதவி கிடைக்க வழி காட்டுகின்றனர்.
  6. நீதி மறுக்கப்பட்ட ஏழைகள் இலவச சட்ட உதவி பெற இலவச சட்ட உதவி மையங்களை நோக்கி வழிகாட்டுகின்றனர்.
  7. இன்று கல்வி, மருத்துவம், வேலை, பொழுதுபோக்கு என எல்லாத்தறைகளிலும் அரசு மற்றும் தனியார் வழிகாட்டும் நிறுவனங்கள் பெருகியுள்ளன. அதற்குக் குறிப்பிட்ட சேவைக் கட்டணம் வசூலிக்கின்றன.
  8. இன்றைய வழிகாட்டலில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்கு அளப்பரியது.