இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் - பகுதி 4
வாழ்வியல்
இயல் மூன்று
திருக்குறள்
கற்பவை கற்றபின்
1. படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க.
விடை: இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை.
2. பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
பாடல்
ஆண்டில் இளையவனென்று அந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம் செய் - மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.
(1893ல் பாரதியாரின் பதினோராவது வயதில் எட்டையபுரம் மன்னர் சமஸ்தானப் புலவர்கள் அவையில், அவரது கவித்திறனைப் புகழ்ந்து 'பாரதி' என்ற பட்டத்தைச் சூட்டினார்.)
குறள்
விடை: ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்.
குறளுக்குப் பொருள்: நமக்கு நல்ல வசதியும் வாய்ப்பும் இருக்கிறது என்றெண்ணி “இவர்க்கு இத்தீங்கை செய்தால் எவர் நம்மை என்ன செய்ய முடியும்?” என்ற இறுமாப்புக் கொண்டு தீங்கிழைத்தவர்களையும் பொறுமைப் பண்பால் வெற்றி காண வேண்டும். (பொறையுடைமை : 8 வது குறள்)
3. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக.
விடை: 1 - இ, 2 - அ, 3 – ஆ
4. தீரா இடும்பை தருவது எது?
விடை: அ) ஆராயாமை, ஐயப்படுதல்
குறள்: தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்
5. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக.
அ) நுணங்கிய கேள்வியர் - நுட்பமான கேள்வியறிவு உடையவர்.
முகிலன் நுட்பமான கேள்வியறிவு உடையவனாக இருந்தான். அதனால் பெரியோரிடத்துப் பணிவான சொற்களில் பேசுகிறான்.
ஆ) பேணாமை - பாதுகாக்காமை.
அப்பாவின் நூலைப் பாதுகாக்காமையால் இனியன் பழைய பேப்பர் வியாபாரியிடம் போட்டுவிட்டான்.
இ) செவிச் செல்வம் - கேட்பதால் பெறும் அறிவு.
அறிஞர்களின் அறிவுரைகளைக் கேட்பதால் பெறும் அறிவு தக்க சமயத்தில் பேச்சுப் போட்டியில் பேசுவதற்கு பயன்பட்டது.
ஈ) அறனல்ல செய்யாமை - அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்.
மலரவன் இளமையிலிருந்தே அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருந்ததனால் தான், அமைதிக்கான விருது கிடைத்தது.
குறுவினா
1. நிலம் போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?
தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை இகழ்பவரிடத்தும் பொறுமை காக்க வேண்டும்.
2. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் - இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.
தான் இன்பம் அடைய வேண்டுமென எண்ணி இன்னொருவருக்குச் செய்யும் தீய செயல்களே பின்னர் அந்த இன்பத்தை நீக்கும். தீச்செயலை எவர் செய்தாரோ அவருக்கே துன்பத்தைத் தரும். தீ தொட்டால் தான் சுடும். தீயசெயல்கள் நினைத்த அளவிலே சுட்டெரிக்கும் ஆற்றல் உள்ளன. அதனால் தான் 'தீயினும் அஞ்சப்படும்' என்றார்.
3. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் - இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.
ஒற்றன் ஒருவன் மறைந்திருந்து கேட்டுத் தெரிந்த செய்தியை மற்றோர் ஒற்றனை அனுப்பி அறிந்து வரச் செய்ய வேண்டும் மன்னன், அவற்றை ஒப்பு நோக்கிய பின்பே, அதனை உண்மையென நம்பவேண்டும்.
4. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?
சொல் ஒன்று, செயல் வேறு என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நடந்து கொள்பவரின் நட்பு கனவிலும் துன்பம் தருவதாகும்.
கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.
மௌனவிரதம் என்னும் தலைப்பில் நான்கு நண்பர்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்டனர். தாங்களும் ஒரு வாரத்துக்கு மௌனவிரதம் இருப்பதாகத் தீர்மானம் செய்தனர். மௌனவிரதம் ஆரம்பமாகி விட்டது! கொஞ்ச நேரம் போனதும் ஒருவன் சொன்னான். "எங்கள் வீட்டு அடுப்பை அணைத்துவிட்டேனா தெரியவில்லையே!”
பக்கத்திலிருந்தவன் "அடப்பாவி! பேசிட்டியே!” என்றான். உடனே மூன்றாவது ஆள், “நீ மட்டும் என்ன? நீயும்தான் பேசிவிட்டாய்!” என்றான். நான்காவது ஆள், “நல்லவேளை! நான் மட்டும் பேசவில்லை !" என்றான். இப்படியாக அவர்களின் மௌனவிரதம் முடிந்து போனது.
கதைக்குப் பொருத்தமான குறள்:
3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்.
விளக்கம்:
கற்க வேண்டிய அறநூல்களைக் கற்றறிந்தும் அதன் உண்மைகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறியும் வாழ்கின்ற ஒருவன், தான் கற்றறிந்த ஒழுக்க நெறியில் வாழத் தவறினால் அவனைப் போன்ற அறிவிலிகள் உலகில் இல்லை. எனவே “சொல்வதைப் போல செய்ய வேண்டும் செய்வதையே சொல்ல வேண்டும்”.
திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சி செய்திகள்
- திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
- திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
- திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை
- திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி
- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்
- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்
- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
- திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்
- திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
- ஏழு என்ற சொல் எட்டு குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
- திருக்குறள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.
கலைச்சொல் அறிவோம்
- அகழாய்வு - Excavation
- நடுகல் - Hero Stone
- புடைப்புச் சிற்பம் - Embossed sculpture
- கல்வெட்டியல் - Epigraphy
- பண்பாட்டுக் குறியீடு - Cultural Symbol
- பொறிப்பு - Inscription