Question 2: புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் – உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.
Answer:
முன்னுரை :
தமிழ்மொழி, இலக்கண இலக்கிய வளம் பெற்றுச் செழித்தோங்கி இருக்கிறது. தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் முதலிய அறிவுக்கருவூலங்கள் நிறைந்துள்ள தொன்மை சான்ற மொழியாகும். தமிழ்மொழியின் சீர் இளமைத்திறம் வியந்து போற்றத்தக்கது. சங்க காலம் முதல் இக்காலம் வரை தமிழ் புதுக்கோலம் பெற்றுப் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. அதன் வளர்ச்சிக்கான என் பங்களிப்பினை இக்கட்டுரையில் காண்போம்.
அறிவியல் தமிழ் :
தமிழ், தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழியாக இருந்து, பிற துறைகளோடு இணைந்து வாழும் மொழியாகவும் கருதப்படுகிறது. “தமிழன் அறிவியல் முன்னோடி” என்று கொண்டல் சு.மகாதேவன் நிலைநாட்டுகிறார். ந. சுப்புரெட்டியார், ஜி.ஆர். தாமோதரன், எழுத்தாளர் சுஜாதா போன்றோர் இத்துறையில் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களைப் பின்பற்றி எதிர்வரும் காலங்களில் என் பங்களிப்பை இதைவிடச் சிறப்பாகச் செய்வேன்.
ஊடகத்துறை :
நம் நாட்டில் பாராளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறையோடு பத்திரிகைத் துறையும் வளர்ந்து வந்திருக்கிறது. இதழியல் தமிழறிஞர்கள் பாரதியார், திரு.வி.க, சி.பா.ஆதித்தனார் ஆகியோரின் வழியில் என் பங்கையும் அளிப்பேன். வானொலி, தொலைக்காட்சி, இணையம், அலைபேசி ஆகியவற்றிற்கான இணையத் தமிழ் அகராதிகளை உருவாக்க முயற்சி செய்வேன்.
கணிப்பொறித் தமிழ் :
இன்று வளர்ந்து நிற்கும் துறைகளுள் முதன்மையானது கணினித்துறை. ஆனால் இதில் இன்றுவரை ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மின்னஞ்சல், பல்லூடகம் போன்றவை மக்களை ஆள்கின்றன. உயிரோட்ட (Animation) வரைபடங்கள், ஒளிக்காட்சிப் படங்கள் (Video), வரைகலை (Graphics), எழுத்து (Text), ஒலி (Sound) ஆகிய கணினிசார் கலைச்சொற்களைத் தமிழில் புதுப்பொலிவுடன் உருவாக்குவேன்.
நிறைவுரை :
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” எனும் பாரதியாரின் கனவை நனவாக்க, புதுமை வடிவம் தந்து தமிழ்ப் பணியாற்றுவேன்.
Get Full Solution of Chapter 1.2 தமிழோவியம்
Click Here to View