Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Thirukkural Explained: 9th Tamil, Chapter 3 (Valviyal) - Samacheer Kalvi

வாழ்வியல்: திருக்குறள்

பண்பாடு – ங
வாழ்வியல் இலக்கியம்
திருக்குறள்
- திருவள்ளுவர்

வாழ்வியல்: திருக்குறள்

பொறையுடைமை (13)

1.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போலத் தன்னை இகழ்பவரைப் பொறுப்பது தலைசிறந்தது.

அணி - உவமையணி

2.

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.

பிறர் தனக்குத் தரக்கூடாத துன்பத்தைத் தந்தாலும் மனம் நொந்து அறம் அல்லாத செயல்களைச் செய்யாமலிருப்பதே நன்றாம்.

3.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.*

செருக்கினால் துன்பம் தந்தவரை நம்முடைய பொறுமையால் வெல்ல வேண்டும்.

தீவினை அச்சம் (21)

4.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

தீயவை தீயவற்றையே தருதலால் தீயைவிடக் கொடியதாகக் கருதி அவற்றைச் செய்ய அஞ்சவேண்டும்.

5.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

மறந்தும்கூடப் பிறருக்குக் கெடுதல் செய்ய நினைக்கக் கூடாது. நினைத்தால், நினைத்தவருக்குக் கெடுதல் செய்ய அறம் நினைக்கும்.

கேள்வி (42)

6.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை.

செல்வத்தில் சிறந்தது செவியால் கேட்டறியும் கேள்விச்செல்வம். அது பிற வழிகளில் வரும் செல்வங்களைவிடத் தலைசிறந்தது.

அணி - சொற்பொருள் பின்வருநிலையணி

7.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.*

எவ்வளவு சிறிதானாலும் நல்லவற்றைக் கேட்டால், கேட்ட அளவுக்குப் பெருமை உண்டாகும்.

8.

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.

நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர் அடக்கமான சொற்களைப் பேசுவது அரிது.

9.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

கேட்பதன் சுவையை உணராமல் நாவின் சுவை மட்டும் உணர்பவர் இறந்தால்தான் என்ன! இருந்தால்தான் என்ன!

தெரிந்துதெளிதல் (51)

10.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

ஒருவரின் குணத்தையும் குற்றத்தையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகுதியானதைக் கொண்டு அவரைப்பற்றி முடிவு செய்க.

அணி - சொற்பொருள் பின்வருநிலையணி

11.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரது செயல்பாடுகளே ஆராய்ந்து அறியும் உரைகல் ஆகும்.

அணி - ஏகதேச உருவக அணி

12.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்வதும் அவ்வாறு தேர்வு செய்தபின் அவரைப்பற்றி ஐயப்படுதலும் தீராத துன்பம் தரும்.

ஒற்றாடல் (59)

13.

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

ஒற்றர் ஒருவர் சொன்ன செய்தியை மற்றோர் ஒற்றரால் அறிந்து முடிவு செய்க!

வினைத்தூய்மை (66)

14.

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.*

வாழ்வில் உயர நினைப்பவர் புகழைக் கெடுக்கும் செயல்களைப் புறம் தள்ளவேண்டும்.

15.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

தாயின் பசியைக் கண்டபோதும் சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யாதே.

16.

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துநீர் பெய்திரீஇ யற்று.

தீய செயலால் பொருள் சேர்த்துப் பாதுகாத்தல் பச்சைக் களி மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போன்றது.

அணி - உவமையணி

பழைமை (81)

17.

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.

நட்பின் உரிமையில் தம்மைக் கேட்காமலேயே ஒரு செயலைச் செய்தாலும் நட்பு பாராட்டுவோர் விருப்பத்தோடு அச்செயலுக்கு உடன்படுவர்.

தீ நட்பு (82)

18.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிமை தராது.

பேதைமை (84)

19.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

தகாத செயலுக்கு வெட்கப்படாமை, தக்கவற்றை நாடாமை, பிறரிடம் அன்பு இல்லாமை, ஏதொன்றையும் பாதுகாக்காமை ஆகியவை பேதையின் செயல்கள்.

20.

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

படித்தும் படித்ததை உணர்ந்தும் உணர்ந்ததை மற்றவருக்குக் கூறியும் தான் அதன்படி செயல்படாத பேதையைப் போலப் பேதை யாருமில்லை!

நூல் வெளி

உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல், திருக்குறள். இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப் பொதுமறை இந்நூல். இது முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மரால் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது. இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலைப் போற்றும் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.

உலகின் பல மொழிகளிலும் பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன், இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள். தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் இந்நூல்.

பிற அறநூல்களைப் போல் அல்லாமல் பொது அறம் பேணும் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் போன்ற சிறப்புப் பெயர்கள் உண்டு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 திருக்குறள் Thirukkural

Samacheer Kalvi 9th Tamil Guide
Chapter 3.5 திருக்குறள்

A Complete Guide with Questions and Answers

திருவள்ளுவர்

Students can Download 9th Tamil Chapter 3.5 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Samacheer Kalvi textbooks for competitive exams

Online education courses in Tamil

Tamil Nadu study guides

கற்பவை கற்றபின்

Question 1. படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க. படம் 1 படம் 2
  • அ) நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
    பேணாமை பேதை தொழில்.
  • ஆ) விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
    கேளாது நட்டார் செயின்
  • இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாந் தலை.

Answer: இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை.

Question 2. பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.

பாடல்
ஆண்டில் இளையவனென்று அந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் – மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.
(1893ல் பாரதியாரின் பதினோராவது வயதில் எட்டையபுரம் மன்னர் சமஸ்தானப் புலவர்கள் அவையில், அவரது கவித்திறனைப் புகழ்ந்து ‘பாரதி’ என்ற பட்டத்தைச் சூட்டினார்.)

குறள்

  • அ) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
    அவியினும் வாழினும் என்.
  • ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
    தகுதியான் வென்று விடல்.
  • இ) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.

Answer: ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்.

குறளுக்குப் பொருள்:

நமக்கு நல்ல வசதியும் வாய்ப்பும் இருக்கிறது என்றெண்ணி “இவர்க்கு இத்தீங்கை செய்தால் எவர் நம்மை என்ன செய்ய முடியும்?” என்ற இறுமாப்புக் கொண்டு தீங்கிழைத்தவர்களையும் பொறுமைப் பண்பால் வெற்றி காண வேண்டும். (பொறையுடைமை : 8 வது குறள்)

Question 3. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக. பொருத்துக கேள்வி
Answer:
  • பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று
    சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல
  • தத்தம் கருமமே கட்டளைக்கல்
    ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்
  • அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்
    அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்
Question 4. தீரா இடும்பை தருவது எது?
  • அ) ஆராயாமை, ஐயப்படுதல்
  • ஆ) குணம், குற்றம்
  • இ) பெருமை, சிறுமை
  • ஈ) நாடாமை, பேணாமை

Answer: அ) ஆராயாமை, ஐயப்படுதல்

குறள்: தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.

Question 5. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக. சொற்கள்
Answer:
  • அ) நுணங்கிய கேள்வியர் – நுட்பமான கேள்வியறிவு உடையவர்.
    முகிலன் நுட்பமான கேள்வியறிவு உடையவனாக இருந்தான். அதனால் பெரியோரிடத்துப் பணிவான சொற்களில் பேசுகிறான்.
  • ஆ) பேணாமை – பாதுகாக்காமை.
    அப்பாவின் நூலைப் பாதுகாக்காமையால் இனியன் பழைய பேப்பர் வியாபாரியிடம் போட்டுவிட்டான்.
  • இ) செவிச் செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு.
    அறிஞர்களின் அறிவுரைகளைக் கேட்பதால் பெறும் அறிவு தக்க சமயத்தில் பேச்சுப் போட்டியில் பேசுவதற்கு பயன்பட்டது.
  • ஈ) அறனல்ல செய்யாமை – அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்.
    மலரவன் இளமையிலிருந்தே அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருந்ததனால் தான், அமைதிக்கான விருது கிடைத்தது.

குறுவினா

Question 1. நிலம் போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?

தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை இகழ்பவரிடத்தும் பொறுமை காக்க வேண்டும்.

Question 2. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் – இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.

தான் இன்பம் அடைய வேண்டுமென எண்ணி இன்னொருவருக்குச் செய்யும் தீய செயல்களே பின்னர் அந்த இன்பத்தை நீக்கும். தீச்செயலை எவர் செய்தாரோ அவருக்கே துன்பத்தைத் தரும். தீ தொட்டால் தான் சுடும். தீயசெயல்கள் நினைத்த அளவிலே சுட்டெரிக்கும் ஆற்றல் உள்ளன. அதனால் தான் ‘தீயினும் அஞ்சப்படும்’ என்றார்.

Question 3. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் – இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.

ஒற்றன் ஒருவன் மறைந்திருந்து கேட்டுத் தெரிந்த செய்தியை மற்றோர் ஒற்றனை அனுப்பி அறிந்து வரச் செய்ய வேண்டும் நம்ப வேண்டும் மன்னன், அவற்றை ஒப்புநோக்கிய பின்பே, அதனை உண்மையென நம்பவேண்டும்.

Question 4. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

சொல் ஒன்று, செயல் வேறு என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நடந்து கொள்பவரின் நட்பு கனவிலும் துன்பம் தருவதாகும்.

கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.

மௌனவிரதம் என்னும் தலைப்பில் நான்கு நண்பர்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்டனர். தாங்களும் ஒரு வாரத்துக்கு மௌனவிரதம் இருப்பதாகத் தீர்மானம் செய்தனர். மௌனவிரதம் ஆரம்பமாகி விட்டது! கொஞ்ச நேரம் போனதும் ஒருவன் சொன்னான். “எங்கள் வீட்டு அடுப்பை அணைத்துவிட்டேனா தெரியவில்லையே!”
பக்கத்திலிருந்தவன் “அடப்பாவி! பேசிட்டியே!” என்றான். உடனே மூன்றாவது ஆள், “நீ மட்டும் என்ன? நீயும்தான் பேசிவிட்டாய்!” என்றான். நான்காவது ஆள், “நல்லவேளை! நான் மட்டும் பேசவில்லை !” என்றான். இப்படியாக அவர்களின் மௌனவிரதம் முடிந்துபோனது.
  • 1. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
    அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
  • 2. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
    அறனல்ல செய்யாமை நன்று.
  • 3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
    பேதையின் பேதையார் இல்.
கதைக்குப் பொருத்தமான குறள்

3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்.

விளக்கம்:

கற்க வேண்டிய அறநூல்களைக் கற்றறிந்தும் அதன் உண்மைகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறியும் வாழ்கின்ற ஒருவன், தான் கற்றறிந்த ஒழுக்க நெறியில் வாழத் தவறினால் அவனைப் போன்ற அறிவிலிகள் உலகில் இல்லை. எனவே “சொல்வதைப் போல செய்ய வேண்டும் செய்வதையே சொல்ல வேண்டும்”.

திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சி செய்திகள்

  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் – அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்
  • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்
  • திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • திருக்குறள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.

கலைச்சொல் அறிவோம்

  • அகழாய்வு – Excavation
  • நடுகல் – Hero Stone
  • புடைப்புச் சிற்பம் – Embossed sculpture
  • கல்வெட்டியல் – Epigraphy
  • பண்பாட்டுக் குறியீடு – Cultural Symbol
  • பொறிப்பு – Inscription