OMTEX AD 2

Analysis of Meykeerthi Poem | 5-Mark Question | Poetic Devices Explained

மெய்க்கீர்த்தி பாநயம் விளக்கம் | 5 மதிப்பெண் வினா

5 மதிப்பெண் வினா மெய்க்கீர்த்தி பாநயம்

பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலில் நயத்தை விளக்குக.

பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடல்

இந்திரன் முதல் திசா பாலர் எண்மரும் ஒரு வடிவாகி

வந்தபடி என நின்று மனுவாணை தனி நடாத்திய

படி யானையே பிணிப்புண்பன

வடி மணிச் சிலம்பே அரற்றுவன

செல் ஓடையே கலக்குண்பன வருபுனலே சிறைப்படுவன

மாவே வடுப்படுவன மாமலரே கடியவாயின

காவுகளே கொடிய வாயின கள்ளுண்பன வண்டுகளே

பொய் உடையன வரைவேயே போர் மலைவன எழுகழனியே

மை உடையன நெடு வரையே மருள் உடையன இள மான்களே

கயல் குலமே பிறழ்ந்து ஒழுகும் கைத்தாயாரே கடிந்து ஒறுப்பர்

இயற்புலவரே பொருள் வைப்பர் இசைப்பாணரே கூடம் செய்வார்


என்று கூறி இவன் காக்கும் திருநாட்டின் இயல் இது என

நின்று காவல் நெறி பூண்டு நெறி அல்லது நினையாது

தந்தை இல்லோர் தந்தையாகியும் தாயர் இல்லோர் தாய ராகியும்

மைந்தர் இல்லோர் மைந்தராகியும் மன்னுயிர்கட்கு உயிராகியும்

விளி பெற்ற பயனென்னவும் மெய் பெற்ற அருளென்னவும்

மொழி பெற்ற பொருளென்னவும் முகம் பெற்ற பனுவல் என்னவும்

எத்துறைக்கும் இறைவன் என்னவும் யாம் செய்.

பாடலில் உள்ள நயங்கள்

தலைப்பு: நாட்டு வளமும் ஆட்சிச் சிறப்பும்

திரண்ட கருத்து

இரண்டாம் இராஜராஜன் ஆட்சியில் பிணைக்கப்பட்டவை யானைகள் மட்டுமே. கட்டுண்டு கொடுமைப்படுத்தப்பட்டவர் யாருமே இல்லை. அழகிய மணிகள் பொருந்திய சிலம்புகள் மட்டுமே ஒலி எழுப்பின. துன்பத்தால் மனம் கசந்து அழுதவர்களின் ஒலி கேட்கவே இல்லை. நீரோடும் ஓடைகளே கலக்கப்பட்டன. உள்ளம் கலங்கினவர் ஒருவரும் காணப்படவில்லை. ஓடி வரும் தண்ணீரே பெரிய நீர்நிலைகளில் சிறைப்படுத்தப்பட்டது. வேறு யாருக்கும் சிறை என்பதே கிடையாது. மாம்பிஞ்சுகளே 'வடு' என்னும் பெயரைப் பெற்றன ஆனால் வடுவுற்றார் என்று கூறப்பட்டார் யாருமில்லை. சோலைகளில் காணப்படும் அழகிய வண்டுகள் மொய்க்கப்பட்ட மலர்களே மணம் மிக்கு விளங்கின. கடிய தன்மை வாய்ந்தவர் எவருமே நாட்டில் இல்லை. சோலைகளே படரும் கொடிகளை உடையனவாக இருந்தன. கொடியவை என்று கூறத்தக்க உயிர்கள் எதுவுமே இல்லை. வண்டுகளே மலரில் மொய்த்துத் தேனாகிய கள்ளினை உண்டு திரிந்தன. வேறு 'கள்' உண்டு மயங்கி திரிந்தவர்கள் யாரும் இருந்திலர். மலைகளில் உள்ள மூங்கில்களே கணுக்கள் எனப்படும் பொய்யினைப் பெற்றிருந்தன. வேறு யாரும் பொய் கூற வேண்டிய அவசியம் இன்றி வாழ்ந்துள்ளனர். நன்கு விளைந்த கழனிகளே வைக்கோல் போர்களைக் குவித்தன. நாட்டில் போர் என்பததே இல்லாததாயிற்று. உயர்ந்த மலைகளே கரிய நிறத்தைப் பெற்றிருந்தன. குற்றம் உடையோர் எவரும் இலர். மான்கள் மட்டுமே மருளும் தன்மை உடையனவாக இருந்தன. எதனாலும் மருளும்நிலை யாருக்கும் ஏற்படவில்லை. மீன்கள் மட்டுமே பிறழ்ந்து பிறழ்ந்து வாழும் இயல்பினைப் பெற்றிருந்தன. வாழ்க்கையில் பிறழ்ந்தவர் சோழ நாட்டில் எவரும் இல்லை. தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளைக் கடிந்து தண்டனை அளித்து வந்தனர். வேறு தண்டனை பெற்றவர் யாருமில்லை. சிறந்த புலவர்கள் தங்கள் பாடல்களில் பொருளைச் சேர்த்து வைத்தனர். வேறு யாருக்கும் பொருளைச் சேர்த்து வைக்கும் அவசியம் ஏற்படவில்லை. இசைப் புலமை வாய்த்துப் பாடிப் பரிசில் பெறும் பாணர்களே இசையினைக் கருவி இசையுடன் கூட்ட முயற்சி செய்துள்ளனர். முயற்சியால் கூட்டி வைக்கும் நிலையில் பிரிவுடையார் யாரும் இல்லை. இம்மன்னனுடைய நாட்டின் இயல்பு இதுவே என்று யாவரும் புகழ்ந்து கூறுமாறு நெறிமுறை நின்று நீதி தவறாது ஆட்சி செலுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தந்தை இல்லாதவருக்குத் தந்தையாகவும் தாயார் இல்லாதவருக்குத் தாயாராகவும் மைந்தர் இல்லாதவருக்கு மைந்தராகவும் உலக உயிர்களுக்கு எல்லாம் உயிராகவும் திகழ்ந்தான். விழிபெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழிபெற்ற பொருளாகவும் புகழ்பெற்ற நூலாகவும் எத்துறைக்கும் இறைவனாகவும் விளங்கினான்.

மையக்கருத்து

இப்பாடல், சோழநாட்டின் வளத்தையும் இரண்டாம் இராஜராஜ சோழனின் நீதிநெறி தவறாத ஆட்சிச்சிறப்பையும் மையக் கருத்தாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.

சொல் நயம்

வடிமணிச்சிலம்பு, எழுகழனி, பிறழ்ந்தொழுகும் கயற்குலம், கூடச் செய்யும் இசைப்பாணர் போன்ற சொல்நயம் மிக்க செஞ்சொற்கள் இப்பாடலின் இன்பத்தைக் கூட்டுகின்றன.

பொருள் நயம்

பொய்யுடைய வரைவேய், மையுடைய நெடுவரை, மெய் பெற்ற அருள், முகம் பெற்ற பனுவல் ஆகியவை ஆழமான பொருளுடையன. இவை, செய்யுளின் மையக் கருத்துக்கு வலிமை சேர்க்கின்றன.

சந்த நயம்

'சந்தம் செந்தமிழுக்கே சொந்தம்' என்பார்கள். வல்லோசையும் மெல்லோசையும் சேருமிடத்தில் சந்தநயம் பிறக்கிறது. பாடல் முழுவதும் சந்தநயம் பயின்று வந்தாலும்

"கயற் குலமே பிறழ்ந்து ஒழுகும் கைத்தாயாரே கடிந்து ஒறுப்பர்

இயற்புலவரே பொருள் வைப்பர் இசைப்பாணரே கூடம் செய்வார்" என்ற அடிகளில் சந்த நயம் சிறப்பாக அமைந்துள்ளது.

தொடை நயம்

"தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்" என்பார்கள். இப்பாடலில் மோனை, எதுகை, முரண், இயைபு ஆகிய நான்கு தொடை நயங்களும் பயின்று வந்துள்ளன.

மோனை நயம்

முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயம் ஆகும்.

"படைக்கு அழகு யானை
பாடலுக்கு அழகு மோனை
" என்பதற்கு ஏற்ப இப்பாடலில்,

மாவே

மாமலரே

பொய்

போர்

என்ற இடங்களில் மோனை நயம் பயின்று வந்துள்ளது.

எதுகை நயம்

முதலெழுத்து அளவொத்து, இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை நயம் ஆகும்.

டி யானை

டிமணிச்சிலம்பு

ன்று

நின்று

என்ற இடங்களில் எதுகை நயம் பயின்று வந்துள்ளது.

முரண் நயம்

முரண்பட்ட சொற்களால் அமைவது முரண்நயம் ஆகும்

'செல் ஓடை × வரு புனல்' என்ற சொற்கள் முரண் சுவையைத் தருகின்றன.

இயைபு நயம்

பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ இயைந்து வருவது இயைபுநயம் ஆகும்.

வண்டுகளே

இளமான்களே

எழுகழனியே

வரைவேயே

நெடுவரையே

என்ற இடங்களில் இயைபு நயம் பயின்று வந்துள்ளது.

அணிநயம்

'அணி இல்லாத கவிதை
பணி இல்லாத வனிதை'
என்பார்கள். இப்பாடலின்,

"இந்திரன் முதல் திசா பாலர் எண்மரும் ஒரு வடிவாகி" என்ற அடிகளில் 'உயர்வு நவிற்சி அணி' பயின்று வந்துள்ளது. இந்திரன் முதலான திசைக் காவலர்கள் எட்டு பேரும் ஒரு வடிவில் தோன்றுவது போல இரண்டாம் இராஜராஜன் ஆட்சி செய்தான் என்று உயர்வாகக் கூறப்பட்டுள்ளது.

'மை உடையன நெடு வரையே மருள் உடையன இள மான்களே' என்ற அடிகளில் 'இயல்பு நவிற்சி அணி' பயின்று வந்துள்ளது. இதுவரை பாடல் முழுவதும் நயங்கள் பயின்று வந்துள்ளதை அறிந்து மகிழ்ந்தோம்.

OMTEX CLASSES AD