Advertisement

பள்ளிகளை உடனே திறக்க கோரி முதல்- அமைச்சருக்கு தனியார் பள்ளி சங்கம் கோரிக்கை

மாணவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கி இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். எனவே பள்ளிகளை உடனே திறக்க கோரி முதல்- அமைச்சருக்கு தனியார் பள்ளி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிகளை உடனே திறக்க கோரி முதல்- அமைச்சருக்கு தனியார் பள்ளி சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலே‌ஷன், சி.பி.எஸ்.சி. பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் முதல்-அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-


பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக திறக்காததால், முழுமையான அளவுக்கு பாடம் நடத்த முடியவில்லை. மேலும் கல்வி கட்டணமும் வசூலிக்க இயலவில்லை. கல்வி கட்டணம் 80 சதவீதம் பேர் செலுத்தாததால் ஆசிரியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறவில்லை. அடுத்த 3 மாதங்களில் முழு ஆண்டு தேர்வு வர இருக்கிறது. 10,11,12 வகுப்புகளுக்கு அரசு பொதுத் தேர்வு உண்டா? இல்லையா? என்ற குழப்பத்தால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.


வீட்டுக்குள்ளே முடங்கி இருப்பதால் மன நோயாளிகளாக மாறும் நிலை உருவாகிறது. பள்ளி திறக்கப்படாததால், பெற்றோர்களும், ஆசிரியர்களும் பெரும் சிரமங்களை சந்திக்கிறார்கள். பள்ளிகளை திறக்க 2 முறை ஆணையிட்டும் ஏற்பட்ட தடைகளை உடைத்தெறிந்து, பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று பள்ளிகளை திறக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா 2-வது அலை இல்லை என்று திட்டவட்டமாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அனைத்து பள்ளிகளையும் விரைவாக திறக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.