கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

 மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கும், என் அன்பு நண்பர்களுக்கும் வணக்கம்!


இன்று நான் ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றி பேச வந்துள்ளேன். அவர்தான் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனார்.


இவர் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தார். அந்த காலத்தில் கடல் வியாபாரம் முழுவதும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அவர்களை எதிர்ப்பதற்காகவும், இந்தியர்களுக்கென்று சொந்தமாக ஒரு கப்பல் நிறுவனம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவர் ஆசைப்பட்டார்.


அதனால், பலரிடம் உதவி கேட்டு, பணம் சேர்த்து ‘சுதேசி’ என்ற கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். அதன் மூலம் இரண்டு கப்பல்களை வாங்கி, தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே ஓடவிட்டார். அதனால்தான் அவரை நாம் பெருமையாக 'கப்பலோட்டிய தமிழன்' என்று அழைக்கிறோம்.


இதனைப் பார்த்த ஆங்கிலேயர்கள் கோபமடைந்தனர். வ.உ.சி. அவர்களைக் கைது செய்து கோவைச் சிறையில் அடைத்தனர். அங்கே அவருக்குக் கடுமையான வேலைகள் கொடுக்கப்பட்டன.


மாடுகள் இழுக்க வேண்டிய செக்கினை, வ.உ.சி. அவர்களை இழுக்கச் செய்து கொடுமைப்படுத்தினார்கள். இதனால் அவரை நாம் 'செக்கிழுத்த செம்மல்' என்றும் போற்றுகிறோம்.


இவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அவர் தன் நாட்டுப்பற்றை ஒருபோதும் விடவில்லை. வ.உ.சி. அவர்களின் தியாகங்களை நாம் எப்போதும் மறக்கக் கூடாது. நாமும் அவரைப் போல நம் நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அன்பும் பற்றும் கொண்டவர்களாக வளர வேண்டும்.

வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.