Urainadaiyin Aninilangal: A Deep Dive into Tamil Prose Stylistics

8 மதிப்பெண் வினா, உரைநடையின் அணிகநலன்கள், விரிவானம்

உரைநடையின் அணிநலன்கள்

ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக

சூழல்: வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்.

(வெளிநாட்டிலிருந்து பாரதி வீட்டிற்கு மலர் வந்திருக்கிறார். பாரதிக்கும் மலருக்குமான உரையாடல் இது)

பாரதி: வாங்க மலர். எப்படி இருக்கீங்க? பத்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் வந்திருக்கீங்க...

மலர்: நலமுடன் இருக்கிறேன். நீங்கள் நலமா? என்ன படிக்கிறீர்கள்?

பாரதி: நலம். தமிழ் இலக்கியம் படித்து இருக்கிறேன். நீங்க என்ன படித்திருக்கிறீர்கள்?

மலர்: ஆங்கில இலக்கியம் படித்து இருக்கிறேன். எனக்கு தமிழைப் பேச மட்டுமே தெரியும். தமிழில் எழுதத் தெரியாது. தமிழ் இலக்கியத்தைப் படிக்க ஆசைப்படுகிறேன். அதுபற்றிக் கூறுங்களேன்.

பாரதி: தமிழ் இலக்கியம் கடல் போன்றது. தற்போது உரைநடையைப் பற்றி மட்டும் உங்களுக்குக் கூறுகிறேன், கேளுங்கள்.

மலர்: மிக்க மகிழ்ச்சி!

உவமை (Parable)

பாரதி: ஆங்கில இலக்கியத்தில் parable என்று சொல்வார்களே, அது தமிழில் 'உவமை' எனப்படுகிறது. உணர்ச்சியைக் காட்ட உவமை கொண்ட மொழிநடையே ஏற்ற கருவி.

"திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்துவைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர்நிறைந்த கண்மாய்கள்" என்று 'குறிஞ்சிமலரில்' நா. பார்த்தசாரதி உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.

மலர்: அட... என்னே கற்பனை!

உருவகம் (Metaphor)

பாரதி: ஆங்கில இலக்கியத்தில் 'metaphor' என்று சொல்லக்கூடிய உருவகம், உவமையைவிட உணர்வைத் தூண்டும்.

முகநிலவில் வியர்வை முத்துக்கள் துளிர்த்தன. இதில் 'முகநிலவு' என்பது உருவகம்.

மலர்: மிக இனிமை. ஆவலாக இருக்கிறதே!

இணை ஒப்பு (Co-op)

பாரதி: எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்தும்போது 'இணை ஒப்பு', ஆங்கிலத்தில் 'co-op' என்று சொல்வார்கள்.

எடுத்துக்காட்டாக, எழுத்தாளர் வ.ராமசாமி 'மழையும் புயலும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ள உரைநடையைச் சொல்லலாம்.

"ஊர்கூடிச் செக்கு தள்ள முடியுமா? என்று கேட்கிறார்கள், ஊர் கூடின பிறகுதான் செக்கு தள்ள வேண்டும் என்று நினைப்பவர்களின் காரியம் கைகூடாது, புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை"

இலக்கணை

பாரதி: உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வு உள்ளன போலவும் கற்பனை செய்வது இலக்கணை.

தமிழ்த்தென்றல் திரு. வி. க. அவர்களின் உரைநடை

"சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும், விருந்து வைக்கும்; ஆல், 'என் விழுதைப் பார், அந்த அரசுக்கு இஃது உண்டா?' என்னும். அரசு கண்ணில் படும், 'யான் விழுது இன்றி ஓங்கி உயர்ந்து நிற்கிறேன், என்னை மக்கள் சுற்றிச் செல்கிறார்கள், காண்' என்னும். வேம்பு, 'என் நிழல் நலம் செய்யும், என் பூவின் குணங்களைச் சொல்கிறேன், வா' என்னும். அத்தி, நாகை, விளா, மா, வில்வம் முதலிய மரங்கள் விளியாமல் இருக்குமோ? சிந்தனையில் அவைகளின் நுட்பங்கள் விளங்கும். மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது இவர்வேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன்; மனம் அமைதி எய்தும்."

மோனை, எதுகை (Rhyme)

பாரதி: மோனையும் எதுகையும் செய்யுளில் வருமாயின் இனிய ஓசை இன்பம் விளையும். ஆங்கிலத்தில் 'rhyme' என்பார்கள்.

எடுத்துக்காட்டு

சொல்லின் செல்வர் ரா.பி. சேதுபிள்ளை அவர்களின் 'தமிழ் இன்பம்' என்ற நூலிலிருந்து....

"தென்றல் தவழ்ந்துவரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மழைவளம் படைத்த பழம்பதி ஆகும் ; கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும்; குரவமும் முல்லையும் நறுமணம் கமழும்; கோலமாமயில் தோகை விரித்தாடும்; தேனுண்ட வண்டுகள் தமிழ்ப்பாட்டிசைக்கும். இத்தகைய மலையினின்று விரைந்து வழிந்து இறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே விழுந்து பொங்கும்போது சிதறும் நீர்த்திவலைகள் பாலாவிபோல் பரந்து எழுந்து மஞ்சினோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும்"

திரும்பத் திரும்பச் சொல்லுதல்

பாரதி: உணர்வு வெளிப்பாட்டிற்கும் சொல்லப்படும் கருத்துக்கு அழுத்தம் தரவும் பயன்படுத்தப்படும் உத்தி, "சொல்லையோ கருத்தையோ திரும்பத் திரும்பச் சொல்வது."

எடுத்துக்காட்டு:

டாக்டர் மு.வ. வின் தம் நாட்டுப்பற்று என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து...

"வாழ்க்கை நடத்துவதற்கு பொருள்கள் பல வேண்டும்; அரிசி, காய், கனி முதலியவை வேண்டும். உடை, வீடு முதலியவை வேண்டும்; காசும் காகிதநோட்டும் வேண்டும்; இன்னும் பல வேண்டும்; இவற்றை ஆளும் அறிவு வேண்டும்".

முரண்படு மெய்ம்மை (Contradictory Reality)

பாரதி: படிப்பவருக்கு முரண்படுவது போல் இருக்கும். ஆனால், உண்மையில் முரண்படாத மெய்ம்மையைச் சொல்வது முரண்படு மெய்ம்மை.

அதாவது 'contradictory reality'.

எடுத்துக்காட்டு:

"இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும்?"

சொல் முரண் (Contradictory)

பாரதி: முரண்பட்ட சொற்களைச் சேர்த்து எழுதுவது சொல் முரண்.

இது 'contradictory'.

எடுத்துக்காட்டு:

'கலப்பில்லாத பொய்'

எதிரிணை இசைவு (Opposite Consent)

பாரதி: சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை அமைத்து எழுதுவது எதிரிணை இசைவு.

ஆங்கிலத்தில் 'opposite consent'.

எடுத்துக்காட்டு:

தோழர் ப.ஜீவானந்தம் எழுதியிருப்பது....

"குடிசைகள் ஒருபக்கம்; கோபுரங்கள் மறுபக்கம் ; பசித்தவர்கள் ஒருபக்கம் ; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக்கூடுகள் ஒருபக்கம்; பருத்த தொந்திகள் மறுபக்கம்; கேடுகெட்ட இந்தச் சமுதாயத்திற்கு என்றைக்கு விமோசனம்? தோழர்களே, சிந்தியுங்கள்!"

கேள்வியிலேயே பதில் இருப்பது

பாரதி: அண்ணா பேசியது...

"அவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவர் தாக்குதலைப் பெறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?... எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் - ஒரு காலகட்டம் - ஒரு திருப்பம் - என்று கூறுகிறேன்".

உச்சநிலை (Climax / Peak)

பாரதி: உச்சநிலை.  அதாவது, climax அல்லது peak.

சொல்லையோ, கருத்தையோ அடுத்தடுத்து வைக்கும் முறையிலே உள்ள சிறப்பு தான்...

எடுத்துக்காட்டு:

பாரதியின் வரிகள்...

"இந்தியா தான் என்னுடைய மோட்சம்; இந்தியாவின் நன்மைதான் என் நன்மை; இந்தியாதான் என் இளமையின் மெத்தை; என் யௌவனத்தின் நந்தவனம்; என் கிழக்காலத்தின் காசி"

மலர்: மிகவும் சுவையாக இருக்கிறது. தமிழ் உரைநடையின் சிறப்புகளைப் பற்றி உரையாடியதற்கு நன்றி!