OMTEX AD 2

Tamil Solvalam: Essay on Tamil Vocabulary and New Word Creation

Tamil Solvalam: Essay on Tamil Vocabulary and New Word Creation

8 மதிப்பெண் வினா, தமிழ்ச் சொல்வளம்

வினா: தமிழின் சொல்வளம்பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக.

தமிழ்மன்றப் பேச்சு

"இனிமைத் தமிழ்மொழி எமது எமக்கு இன்பம் தரும்படி வாய்த்தநல் அமுது". அமுத மொழி - தமிழ் மொழி. தமிழ்மொழியின் மன்றத்திற்கு வருகை தந்துள்ள சான்றோர் பெருமக்களே! பள்ளி எனும் தேரின் அச்சாணியாகிய தலைமை ஆசிரியர் அவர்களே! ஒளி விளக்கின் தூண்டுகோலாகிய ஆசிரியர் பெருமக்களே! நீர்த் தடாகத்தின் ஆம்பல் மொட்டுகளாகிய மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

தமிழின் சொல்வளம் குறித்தும், புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் உங்களிடத்தில் நான் பேசப் போகிறேன்.

தமிழின் சொல்வளம்

கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கு இடையில் நீந்தித் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது, தமிழ் மொழி. சொல்வளம் இலக்கிய செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவானது, என்றாலும் தமிழ் மட்டும் அதில் தலைசிறந்தது.

பயிர் வகைச் சொற்கள்

தமிழ்ச் சொல் வளத்தைப் பல துறைகளிலும் காணலாம். அதில் சிறப்பாக பயிர் வகைகளில் சொல் வளத்தைப் பற்றி இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

தாவரத்தின் அடிப்பகுதியை அதன் மென்மை வன்மை குறித்துத் தாள், தண்டு, கோல், தட்டை, தூறு, கழி, கழை, அடி எனப் பகுத்துள்ளனர்.

அடியில் இருந்து பிரிந்து செல்லும் மேல்நோக்கிய பிரிவுகளுக்கு கவை, கொப்பு, கிளை, சினை, போது, குச்சு, இணுக்கு எனப் பாகுபாடு செய்துள்ளனர்.

இலையின் வகைகளை அதன் மென்மை வன்மை பற்றி இலை, தாள், தோகை, ஓலை என்றும் காய்ந்த இலையைச் சருகு என்றும் காய்ந்த தோகையைச் சண்டு என்றும் பாகுபடுத்தி உள்ளனர்.

பூவின் மலரும் நிலைகளை அரும்பு, போது, மலர், வீ, செம்மல் எனப் பகுத்துள்ளனர்.

பிஞ்சின் வகைகளைப் பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, மூச்சு, கவ்வை, குரும்பை, முட்டுக் குரும்பை, இளநீர், நுழாய், கருக்கல், கச்சல் எனப் பெயரிட்டுள்ளனர்.

இதேபோல் குலை வகைகள், காய்கனி வகைகள், மணி வகைகள், இளம் பயிர் வகைகள், இளம்தளிர் வகைகள் என ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன.

இதனால், தமிழ் சொல்வளம் உடையது என்பதும், தமிழ்நாடு பொருள் வளம் உடையது என்பதும் தெளிவாக விளங்குகிறது.

புதிய சொல்லாக்கத்திற்கான தேவை

இனி, தமிழில் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்துப் பார்ப்போம்.

ஒப்பீட்டளவில் இன்று மொழியின் வளர்ச்சிக்கு ஆதாரமாகச் சொல்லாக்கம் விளங்குகிறது.

நாளும் மாறிவரும் அறிவியல், தொழில்நுட்பத்தின் விளைவாகத் தகவல் தொடர்பியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இன்று தகவல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

ஒரு மொழியின் வளர்ச்சியென்பது இத்தகைய தகவல் தொழில்நுட்பப் புரட்சியை உள்வாங்கிக் கொண்டு, செறிவாக, வெளிப்படுவதாகும்.

குறிப்பாக இணையகங்களின் பக்கங்களில் அதிகபட்சமான இடத்தினைப் பிடித்துள்ள மொழிகளே, நன்கு வளர்ச்சியடைந்தவைகளாகக் கருதிட இயலும்.

இந்நிலையில், கருத்தியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் சொற்கள் அதிக அளவில் உருவாக்கப்படுகின்ற மொழிகளே, உச்ச நிலையினை அடைய முடியும்.

தமிழைப் பொறுத்த வரையில், ''ஆட்சி மொழியாகவும் உயர்கல்வியில் பயிற்று மொழியாகவும் தமிழே இடம்பெற வேண்டும்'' என்பதால், புதிய சொல்லாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய முயற்சிகள், தமிழ்மொழியின் வளர்ச்சி வேகத்தினைத் தூண்டுகின்றன; சொற்களஞ்சியம் பெருகிடக் காரணமாக அமைகின்றன. எனவே, அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை இருக்கிறது என்று கூறி, எனது உரையை நிறைவு செய்கிறேன்.

OMTEX CLASSES AD