OMTEX AD 2

Humanity in Ku. Alagirisamy's 'Oruvan Irukkiran': An 8-Mark Question Analysis

Humanity in Ku. Alagirisamy's 'Oruvan Irukkiran': An 8-Mark Question Analysis

8 மதிப்பெண் வினா

அழகிரிசாமியின் 'ஒருவன் இருக்கிறான்' என்னும் சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.

ஒருவன் இருக்கிறான்

துணையின்றி வாழும்நிலை இரங்கத்தக்கது. எப்படிப்பட்டவராக இருந்தாலும் பிறரது துணையைச் சார்ந்திருக்க வேண்டியநிலை இருக்கிறது. துணையே இல்லாதவர் என்று கருதி நாம் அலட்சியம் செய்பவருக்கும் துணை ஒன்று இருப்பதை அறியும்போது நமக்குக் குற்ற உணர்ச்சி தோன்றும் வாய்ப்பு இருக்கிறது. எப்படிப்பட்டவருக்கும் ஒரு துணை இருக்கும். அந்தத் துணைதான் மனிதத்தின் வேருக்கு நீர். அதில் மனிதம் துளிர்க்கும்.

கட்டைத் தொட்டி ஆறுமுகத்தின் மனிதநேயம்

அம்மா அப்பா இல்லாத குப்புசாமி, காஞ்சிபுரத்தில் தாய்மாமன் வீட்டில் தங்கி ஒரு சைக்கிள்கடையில் வேலைசெய்து வாழ்ந்து வந்தான். அந்தக் கடைக்கு எதிரே ஒரு விறகுக் கடையில் வேலைசெய்து வந்தவன்தான் கட்டைத் தொட்டி ஆறுமுகம். ஆறுமுகத்தின் பக்கத்து வீட்டுக்காரன் வீரப்பன் என்பவனும், குப்புசாமியும் நெருங்கிய நண்பர்கள். குப்புசாமி வயிற்றுவலி காரணமாக சென்னைக்கு உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தான். சென்னைக்குத் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு வந்த ஆறுமுகம் குப்புசாமியைப் பார்க்க, அவனுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றான். பார்க்க முடியவில்லை. அந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்தவரிடம், தன் குழந்தைகளுக்காக வாங்கிய சாத்துக்குடிப் பழங்களில் இரண்டு சாத்துக்குடிப் பழங்களையும், ஒருரூபாய் நோட்டு ஒன்றையும் கொடுத்து, அதைக் குப்புசாமியிடம் சேர்த்துவிடும்படி வேண்டுதலை முன்வைத்துத் தன்னுடைய மனிதத்தை வெளிப்படுத்தினான்.

ஏழ்மையிலும் இரங்கிய வீரப்பன்

வீடுகட்டுகிற ஒரு மேஸ்திரியிடம் சிப்பந்தியாக வேலைசெய்து வந்தவன் வீரப்பன். நோய் காரணமாகக் குப்புசாமி வேலை இழந்து தாய்மாமன்வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது, வீரப்பன்தான் அவ்வப்போது அவனை அழைத்துவந்து சாப்பாடு போடுவான். சிலநாட்கள் வேலை இல்லாமல், வருமானமும் இல்லாமல் துயரப்படுகிற ஏழையாக இருந்தாலும், கடன் வாங்கியாவது தன் நண்பனுக்கு உதவிசெய்து வந்தான்.

கடிதத்தில் கசிந்த மனிதம்

சென்னைக்குச் சிகிச்சைக்கு சென்ற குப்புசாமிக்கு, ஆறுமுகத்திடம் கொடுத்து அனுப்பிய வீரப்பனின் கடிதத்தில் மனிதம் கசிந்திருந்தது. அந்தக் கடிதத்தில்,"என் உயிர்நண்பன் குப்புசாமிக்கு எழுதிக் கொண்டது... நீ இங்கிருந்து போனதிலிருந்து என் உயிர் இங்கே இல்லை. சதா உன் ஞாபகமாகத்தான் இருக்கிறேன். கடவுள் அருளால் நீ உடம்பு சௌக்கியமாகி வரவேண்டும் என்று தினமும் ஒருதடவை கோவிலுக்குப் போய்க் கும்பிடுகிறேன். எனக்கு இப்போது வேலை இல்லை. கொஞ்ச நாட்களாக வருமானம் இல்லாமல் இருக்கிறேன். நேற்று கட்டைத்தொட்டி ஆறுமுகம் பட்டணம் போவதாகச் சொன்னான். உடனே ஓடி ஒருவரிடம் மூன்றுரூபாய் கடன் வாங்கி அவனிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறேன். நானே வரலாம் என்று பார்த்தேன். வந்தால் இந்த மூன்றுரூபாயும் பஸ்ஸூக்குச் செலவாகிவிடும். உனக்குச் சமயத்தில் உதவியாக இருக்கும் என்று நினைத்து நான் ரூபாயைச் செலவழித்துக் கொண்டு வராமல் ஆறுமுகத்திடம் கொடுத்து அனுப்பியிருக்கிறேன். இன்னோர் இடத்திலும் பணம் கேட்டிருக்கிறேன். கிடைத்தால் நான் சீக்கிரம் உன்னைப் பார்க்க வருவேன். உன்னைப் பார்த்தால்தான் நான் தின்னும் சோறு, சோறாக இருக்கும்" என்று உருக்கமாக எழுதியிருந்தான்.

கதைசொல்லியின் மனத்தில் கசிந்த மனிதம்

மேற்கண்ட கடிதத்தைப் படித்த கதைசொல்லியின் கண்களில் கண்ணீர் கசிந்தது. அதை வெளிக்காட்டாமல் மனைவியை அழைத்து, "குப்புசாமியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போய் வருவோம்" என்றார். அவளும் மகிழ்ச்சி அடைந்தாள். "குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான். குப்புசாமிக்கு மட்டுமா? எனக்குமே ஒருவனாக அவன் இருக்கிறான்" என எண்ணியபடி குப்புசாமிக்குப் பழம் வாங்கப் புறப்பட்டார்.

வீரப்பன், கட்டைத்தொட்டி ஆறுமுகம் போன்ற மனிதர்களின் மனிதத்தால்தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் நிலைபெற்றிருக்கிறது. இதைத்தான் வள்ளுவர், "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்" என்று இயம்பியிருக்கிறார் போலும்!

OMTEX CLASSES AD